விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, முதன்முறையாக மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் புளுபேர்ட் செயற்கைக்கோள் 6 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்டது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கான இந்த செயற்கைக்கோள், பாகுபலி ராக்கெட் எனப்படும் எல்.வி.எம்-மூன்று-எம்.6 ராக்கெட் மூலம் சரியாக இன்று காலை மணி 8.55-க்கு விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைக் கோளை சரியான திசையில், உரிய விண்வட்டப் பாதையில் ராக்கெட் ஏவியதை அறிந்ததும், இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்காக, அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போதைய நிலவரப்படி அது மிகச்சரியாக வேலையை செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், எல்.வி.எம்-மூன்று எம்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளித்துறையில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும், இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் அதிக எடைகொண்ட செயற்கைக் கோள் என்றும், எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்திய விண்வெளிப்பயணத்தில், ஒரு பெருமை மிக்க மைல்கல் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். விண்வெளி உலகில், இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version