பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியது. ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். இப்போதைய சூழ்நிலையில், அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என, பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜி.கே. மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிககையில், பாமகவின் நலனுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராக ஜி.கே.மணி செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர், எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, அன்புமணி உடன் யாரும், பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என, ராமதாஸ் தரப்பில் இன்றைய நாளிதழ்களில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து அன்புமணி தரப்பு நீக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















