மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தில், இத்திட்டம் தொடர்பான பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, மனித விண்வெளிப் பயணத்திற்கான பாராசூட் அமைப்பைத் தகுதி பெறச் செய்வதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை என கூறப்படுகிறது.
