தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய இன்று முதல் பரிசோதனை தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றை பரிசோதனை செய்யும் முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
பெல் நிறுவனத்தை சேர்ந்த 20 பொறியாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 250 முதல் 300 இயந்திரங்கள் வரை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் நேரில் சென்று இந்த பணிகளை பார்வையிட்டார். மின்னணு எந்திரங்களின் சோதனைகளை கண்காணிக்க அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
















