திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலையில் கோயில் சன்னிதி முன்பு அர்த்தமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மகாதீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மகாதீபம் ஏற்றுவதற்கான சிறப்புக் கொப்பரையில் ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரி மற்றும் 3 ஆயிரத்து 500 லிட்டர் நெய்யைக் கொண்டு மகாதீபத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 6.00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் வாயிலில் சிறப்புத் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
