கோவையில், இருசக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் மறைத்துவைத்து கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லைப் பகுதியான வேலந்தாவளம் சோதனை சாவடியில், கந்தேகவுண்டன் சாவடி போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றதால், போலீசார் துரத்தி சென்று மடக்கினர்.
வாகனத்தின் சீட்டிற்கு அடியிலும், பெட்ரோல் டேங்கிலும் ரகசிய அறைகள் ஏற்படுத்தி, அதனுள் கட்டுக்கட்டாக 56 லட்சத்து 500 ரூபாய் ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டிச் சென்ற, கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த ஷபீக்-கை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
















