எஸ்.ஐ.ஆர் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலில் 97 லட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். மிக அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் பேரும், கோவையில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கிய எஸ்.ஐ.ஆர். எனப்படும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி, எஸ்.ஐ.ஆருக்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இதில், 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் இருப்பதாக அர்ச்சனா பட்நாயக் கூறினார். இதில், மிக அதிகபட்சமாக 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் இடம்பெயர்ந்தவர்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 என அவர் தெரிவித்தார்.
