தொடங்கியது தொகுதிப் பேச்சுவார்த்தை – பிஜேபிக்கு எத்தனை சீட்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பிஜேபி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. இந்நிலையில், பியூஷ் கோயல், டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில், பிஜேபி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, பிஜேபி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த பியூஷ் கோயல், அர்ஜூன்ராம், முரளிதர் சோஹல் ஆகியோர், கட்சியின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பியூஸ்கோயல், அர்ஜூன்ராம் மெக்வால், முரளிதர் சோஹல் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிஜேபி தரப்பில் எல்.முருகன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன் ஆகியோர், பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர். சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது?, அவை எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்தும், கூட்டணியில் வேறு எந்த கட்சியை சேர்ப்பது? என்பது குறித்தும், ஆலோசனை நடத்தியதாக, தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version