பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – கொத்தனார் கைது.

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகில் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை கும்பகோணம் பகுதியில் இருந்து எண்கண் வழியாக திருவாரூருக்கு செல்லும் அரசு பேருந்து சென்றுள்ளது. அதில் திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் வந்துள்ளனர்.அப்போது பேருந்து கூட்டமாக இருந்த நிலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் தங்களது புத்தகப் பையை இருக்கையில் அமர்ந்தவர்களிடம் வைத்துக் கொள்ள கொடுத்துள்ளனர்.
மேலும் எண்கண் பகுதியில் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை பகுதியை சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் 44 வயதுடைய ஸ்ரீதர் என்பவரிடம் 13 வயதுடைய பள்ளி மாணவி தனது புத்தகப் பையை கொடுத்துள்ளார்.
அப்போது அம்மையப்பன் அருகே பேருந்து வந்த போது அந்த மாணவியிடம் ஸ்ரீதர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அப்பொழுது அந்தப் பள்ளி மாணவி கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த மற்ற பயணிகள் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்ரீதரை திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த அனைத்து மகளிர் காவல் துறையினர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version