நாங்கள் தற்குறிகளா? ஆச்சர்யக்குறி – கொந்தளித்த விஜய்

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே, தாம் அரசியலுக்கு வந்ததாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தருவதே, தமது நோக்கம் என்று, த.வெ.க தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அழைப்பிதழ் அனுப்பபட்டிருந்த, த.வெ.க நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், நல்லது செய்வோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினர், இப்போது கொள்ளையடிப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே தான் அவர்களை, நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்று குறிப்பிட்டார்.

காஞ்சிபுரத்தின் ஜீவநதியாக பாயும் பாலாற்றில், ஆட்சியாளர்கள் 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணல் திருட்டில் ஈடுபட்டதன் மூலம், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இதற்கான ஆதாரத்தை, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கொடுத்திருப்பதாகவும் விஜய் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் நெல் விவசாயிகள், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டு நெசவு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஜய் குறை கூறினார்.

திமுகவினர் தங்களை தற்குறி என்று சொல்வதற்கு கண்டனம் தெரிவித்த விஜய்,
நாங்கள் தற்குறிகள் அல்ல, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆச்சரியக்குறி என்றும், உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

Exit mobile version