கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசு 1957-ம் ஆண்டு முதல், செவாலியர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு “செவாலியர்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில், தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான, செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது, நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
