பிஜேபி-யின் கிளை அமைப்பாக அதிமுக மாறி விட்டதாகவும், செல்வாக்கு மிகுந்த மேற்கு மண்டலத்திலும் அதிமுக-வின் வாக்கு சரிந்து விட்டதாகவும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்து முதல்வருடன் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்ற அடிப்படையில் கொங்கு இளைஞர் பேரவை இந்தக் கூட்டணியில் இடம்பெற முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். திமுக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
அதிமுக-வைப் பொறுத்தவரை பிஜேபி-யின் கிளை அமைப்பாக மாறி விட்டதாகவும், இது வேதனையளிக்கக்கூடியது என்றும் தெரிவித்த அவர், செல்வாக்கு மிகுந்த மேற்கு மண்டலத்திலும் எடப்பாடி பழனிசாமியின் போக்கினால் வாக்குகளை இழந்துள்ளது என்றார்.

















