கோவை ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

25 ஆம் தேதி கோவை செல்லும் முதலமைச்சர் அங்கு, 45 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவினை திறந்து வைக்க உள்ளார். பின்னர் அன்று மாலையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

26 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஈரோடு மாவட்டம் வடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் திருவுருவ சிலை மற்றும் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்ட வளாகத்திற்கு நேரில் சென்று, அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 494 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில், சித்தோடு ஆவின் பால் பண்ணை வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பால்வள தந்தை பரமசிவன் அவர்களின், திருஉருவ சிலையினை ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Exit mobile version