தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலேயே மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசை நிராகரித்துவிட்டதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மற்றும் மதுரை மாநகரில், போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு மத்திய பிஜேபி அரசு செயல்பட்டு வருவதாக, போராட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
