பீகார் மாநிலத்தில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் -பிஜேபி கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி இரண்டாம் இடத்தையே பிடிக்கும் என்று கூறியுள்ளன.
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்து கணிப்புகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், என்டிஏ கூட்டணி 133 முதல் 148 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் -ஆர்ஜேடி கூட்டணிக்க்கு 70 – 90 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேட்ரிஸ் என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பில் 147 – 167 தொகுதிகள் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும், 90 – 102 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஐஏஎன்எஸ் வெளியிட்ட கணிப்பில் 147 – 167 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணி 75 – 101 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் 135 -150 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 88 – 103 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைத்து கணிப்புகளும் தெரிவித்திருப்பதுடன், காங்கிரஸ் கூட்டணி இரண்டாமிடத்திற்கு தள்ளப்படும் என்று கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒற்றை இலக்கத்திலேயே வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளன.
