மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள கடலோர மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தமிழக அரசு ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது.
குமரிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்பதால், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், பேரிடரை எதிர்கொள்ள மேற்க்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், நிவாரண மையங்களையும், மீட்புப் படையினரையும் தயார் நிலையில் வைக்குமாறும், நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக நகர்வு செய்யுமாறும் அறிவுறுத்தினார். கூடுதல் மின்கம்பங்கள், மின்வடங்களை தயாராக வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக பேரிடர் மீட்புப் படையின் 3 அணிகள், நாகை மாவட்டம் வேளாங்கன்னியிலும், இரண்டு அணிகள் கடலூரிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி வரும் 26ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நிறுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
