தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடீசியா அரங்கில், இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை தொடங்கிவைத்து, இயற்கை விவசாயிகளுடன் பிரதமர் மோடி, கலந்துரையாட உள்ளார். இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளையும் மோடி வழங்குகிறார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து, இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் மணிக்கு கோவை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடீசியா அரங்கத்திற்கு செல்கிறார். அப்போது, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பிலும், பிஜேபி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடுவதுடன், அவர்களின் கருத்துகளை பிரதமர் கேட்டறிய உள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் பிரதமரின் விவசாயிகள் நல நிதியின் 21-வது தவணைத் தொகையான 18 ஆயிரத்து 9 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மோடி விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், விழா நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். கொடிசியா செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
பிரதமருக்கு வரவேற்பு அளிப்பதற்காக 50 ஆயிரம் பேர் திரண்டு வருவார்கள் என்று தமிழக பிஜேபி தெரிவித்துள்ளது.
