தனது பிறந்த நாளையொட்டி இல்லத்திற்கு வந்து தன்னை கௌரவப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் தனது 71-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவரது இல்லத்திற்கு குடும்பத்தினருடன் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் இன்று பகிர்ந்துள்ள கமலஹாசன்,
தன்னுடைய அழைப்பை ஏற்று தனது இல்லத்துக்கு வருகை தந்து, தன்னையும் தன் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான தனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது என கமல் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக் கட்டப்பட்டது தங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு என்றும் நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


















