ஆந்திராவில் இருந்து சென்னை சவுகார் பேட்டைக்கு நகை வாங்குவதற்காக கொண்டுவரப்பட்ட 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயிலில் வந்த இளைஞர் ஒருவர், எழும்பூர் ரயில்நிலையத்தில் ஒரு பையுடன் இறங்கினார். அவரைப் பிடித்து, ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்ததில், ஆவணங்கள் ஏதுமின்றி 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணத்தை அவர் எடுத்து வந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னையில் பணத்தை பத்திரமாக ஒப்படைத்தால் 3 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைத்ததும், அந்த நபர் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் ஹவாலா கும்பல் குறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















