பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில் வாக்குப்பதிவு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 314 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவு தொடங்கியதுமே ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சற்று முன்வரை வாக்குப்பதிவு 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணிவரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குப்பதிவை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
