வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்..இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்டு இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
ஆனால் இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 34 நிமிடங்களில் சமூக வலைதளப் பதிவுகளை நீக்கிவிட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
