தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், மக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக, காவல் துறையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் முறையான திட்டமிடல் மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழக்க காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், விஜய் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இந்நிலையில், த.வெ.க. எதிர்காலத்தில் நடத்தவுள்ள பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், மக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக, பாதுகாப்பு திட்டமிடல் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் 15 பேர் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த அதிகாரிகள் குழு பொதுக்கூடடத்திற்கான பாதுகாப்பு திட்டமிடல் மட்டுமில்லாமல், கட்சி நிர்வாகிள் மற்றும் தொண்டர் அணியினருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
 
			















