14 வயதில் ரஞ்சி கிரிக்கெட் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி — இந்திய வரலாற்றில் முதல்முறை!

ரஞ்சி கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகள் படைத்து வந்திருக்கும் வைபவ், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்கனவே பிரபலமான பெயராக மாறியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம், மற்றும் டிட்வெண்டி வடிவில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமைகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானதாக அமைந்தன.

அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான யூ–19 ஒருநாள் தொடரில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வைபவ், 174.02 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் 355 ரன்களை குவித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளைஞர் டெஸ்ட் போட்டியிலும் 113 ரன்கள் அடித்து டெஸ்ட் வடிவிலும் தன் திறனை வெளிப்படுத்தினார்.

இப்போது அந்தப் பயணத்தின் அடுத்த படியாக, பீகார் கிரிக்கெட் சங்கம் அவரை 2025–26 ரஞ்சி தொடருக்கான பீகார் அணியின் துணை கேப்டனாக நியமித்துள்ளது. இதன்மூலம் ரஞ்சி வரலாற்றில் 14 வயது வீரர் ஒருவருக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது முதல்முறை ஆகும்.

அணியின் தலைவராக சகிபுல் கனி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பீகார் அணி அக்டோபர் 15ஆம் தேதி மொயின்-உல்-ஹக் மைதானத்தில் நடைபெறும் பிளேட் லீக் தொடக்க ஆட்டத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை எதிர்கொள்ள உள்ளது.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மோதிபூர் கிராமத்தைச் சேர்ந்த வைபவ், ஏற்கனவே 2023–24 ரஞ்சி தொடரில் 12 வயதிலேயே பீகார் அணிக்காக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் திறமை மீது பீகார் கிரிக்கெட் சங்கம் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இளவயதில் அதிக பொறுப்பைச் சுமத்துவதை தவிர்க்க வேண்டுமென சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எதுவாயினும், 14 வயதிலேயே இத்தகைய பதவியைப் பெற்றிருப்பது, வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரம் என்பதற்கே இன்னொரு சான்றாக அமைந்துள்ளது.

Exit mobile version