சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் மற்றும் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 27 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவு 11 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இதே போல, சென்னை தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9-35 மற்றும் 10-30 மணிக்கும் திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
 
			















