திமுக-வும், காங்கிரசும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில் இணைந்து செயல்படுவதாகவும், தனிநபரின் நலனை விடவும் நாட்டின் நலனே முக்கியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சொக்கர் இல்லத் திருமணவிழா இன்று நடைபெற்றது.
அதாவது, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் மகன் சிவராஜா – சாலுபாரதி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர்தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்ததை சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தி தம்மை சகோதரர் என்று அழைப்பதை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், தாமும் அவரை சகோதரர் என்றே அழைப்பதாக கூறினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுக-வும் வெவ்வேறு அணியில் பயணித்த போதிலும், தற்போது, நாட்டின் நலனுக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும், ஒரே அணியில் இணைந்து செயல்படுவதாக ஸ்டாலின் கூறினார்.
