தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, தமிழகத்தை நோக்கி வருமா, ஆந்திரா செல்லுமா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை ஐந்தரை மணியளவில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலாகவும், 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறும், வரும் 27ம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் வடதமிழகத்தை நோக்கி வருமா அல்லது தெற்கு ஆந்திராவை நோக்கிச் செல்லுமா என்பது புயல் உருவான பிறகு அதன் வேகம், பயணிக்கும் திசையை வைத்து ஓரிரு நாட்களில் தெரியவரும் என வானிலையாளர்கள் கூறுகின்றனர்.

















