சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கக்கவசம் மாற்றப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தியை, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்திற்கு அழைத்து வந்து, சிறப்பு விசாரணைக் குழு விசாரித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, சபரிமலை தங்க கவசங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் கவசங்களை செப்பனிட்டு கொடுத்துள்ளார். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுத்து, இப்பணிகளை அவர் செய்துள்ளார்.
அதன்பின்னர் தங்க கவசத்தின் எடை நான்கரை கிலோ குறைந்திருப்பதும், தனது அனுமதியின்றி தங்க கவசம் செப்பனிட கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எச் வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை கேரளா உயர்நீதிமன்ற நியமித்தது. அந்த குழுவினர், பெங்களூருவில் இருந்த உன்னிகிருஷ்ணன் போத்தியை கைது செய்து, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தங்க கவசம் செப்பனி டப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு அழைத்துவந்து 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

















