மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்த வழக்கினை, சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை, குற்ற வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறி, போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், அதன்பிறகு வீடு திரும்பாத அவர், கண்மாய் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரை விசாரித்து அனுப்பிய பிறகு, அவர் கண்மாயில் விழுந்து உயிரிழந்துவிட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், விசாரணை என்ற பெயரில், தினேஷ்குமாரை போலீஸார் அடித்து கொலை செய்து, கண்மாயில் வீசி விட்டதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது, கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செல்வக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தினேஷ்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அண்ணா நகர் காவல் நிலையத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க உத்தரவிட்டனர். மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தினேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
