நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 புள்ளி இரண்டாக உயர்ந்திருப்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்த போதிலும், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி 8 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி.டி.பி விகிதம் உயர்ந்திருப்பது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 2025-26-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 புள்ளி இரண்டு சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது மத்திய அரசின் வளர்ச்சி ஆதரவு கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிப்பதாகவும், நாட்டு மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியையும் பிரதிபலிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வையும் எளிதாக்கும் திட்டத்தை வலுப்படுத்தும் என்றும், மோடி குறிப்பிட்டுள்ளார்.
