காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால், பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கீழ்வேளூர், கொடியாலத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பல்வராயன்பேட்டை, திருவிழந்தூர், கோட்டூர், மணலூர், உக்கடை உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கால்வாய் அடைப்புகளை நீர்வளத் துறை அதிகாரிகள் சரி செய்யாததால், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், பயிர் சேதங்களை கணக்கிட்டு, நிவாரணத் தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் கொடிங்கால் வாய்க்கால்களில் ஆகயாத் தாமரைகள் படர்ந்துள்ளதால், வௌ¢ளநீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், மருதூர், ராஜேந்திரம், பரளி, பணிக்கம்பட்டு பகுதிகளில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
