திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து வைரவன் ஏரியை பார்வையிட்ட அவர் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார கூட்டத்திற்கு தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுப்பதாக கூறினார். கட்சி தலைமையின் அனுமதி பெற்று தனது கூட்டத்திற்கு வர தவெகவினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக கூட்டணியினர் தேவையற்ற விமர்சனங்களை செய்வதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட கூட்டணியில் நாட்டம் ஏற்படுவது வழக்கம் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் என திமுக கூட்டணி கட்சிகள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டதாகவும் பழனிசாமி கூறினார்.