முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுநேர சினிமா விமர்சகராக மாறி விட்டார் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை, தாம் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ, எந்த தவறும் இல்லை, ஆனால் தாம் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, மு.க. ஸ்டாலின், முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார். முதல்வரின் இந்த செயல் கவலை அளிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
			

















