நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ஆயிரத்து 20 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத் துறை இயக்குனர், தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றிருப்பது இந்தக் கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது என பழனிசாமி கூறியுள்ளார். மேலும், கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை 20 முதல் 25 சதவீதம் வரை ஊழல் நடந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம், ஐஸ் கட்டியின் ஒரு துளி தான் எனவும், இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் அமலாக்கத் துறை கூறியிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, அமலாக்கத் துறை 888 கோடி ரூபாய் பணத்திற்கு வேலை என்ற முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், அமைச்சரைக் காப்பாற்றி வரும் நியில், தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன என்று கூறியுள்ள இபிஎஸ், அதிமுக தலைமையில் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என கூறியுள்ளார்.
