98 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.
அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்று 52 மாதங்கள் ஆகியும், எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டதாக கூறிய அவர், இதை கட்டுப்படுத்த முடியாமல், அரசு திணறி வருவதாகவும் கூறினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதியை தர்மபுரியில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இனி ஆன்லைன் மூலமே, விவசாயிகள் கடன் பெறலாம் என அரசு கூறிய நிலையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சி அமைந்த தும், அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்படும். அம்மா மினி கிளினிக் போன்ற நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
