சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில், 4 இளம்பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த நால்வரும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தேவகி செல்வம், ஷாலினி, பவானி மற்றும் கல்லூரி மாணவி காயத்ரி என தெரியவந்துள்ளது.
நான்கு பேரும் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியை சுற்றிப்பார்க்க வந்தபோது, காயத்ரி கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கிக்கொண்ட அவரை காப்பாற்ற முயன்ற மற்றவர்களும், கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு பலியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















