டாக்கா விமான நிலையத்தில் பெருந்தீ – சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் திரும்பியது

வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னையிலிருந்து டாக்கா புறப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டாக்கா விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தைத் தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் எல்லைக் காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் பாதுகாப்பு கருதி அனைத்து விமானச் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. சரக்கு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. தீ விபத்து காரணமாக விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் பெரும் பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.

சென்னையிலிருந்து பிற்பகல் 186 பயணிகளுடன் டாக்கா புறப்பட தயாரான விமானம், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து புறப்பட்ட மற்றொரு விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. டாக்காவிலிருந்து மறுஉத்தரவு வந்த பின்னரே விமான சேவை தொடங்கும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version