டெஸ்ட் கிரிக்கெட்-இந்திய அணி நிதான ஆட்டம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆம் நாளில், இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சுகளைச் சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். இதனால், 162 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணி முதல் இன்னிங்சை இழந்தது.

இதனையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கும், சாய்சுதர்சன் 7 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 121 ரன்கள் எடுத்தது, கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டத்தில், சுப்மன் கில் அரைசதம் அடித்து வெளியேறினார். பின்னர் துருவ் உடன் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Exit mobile version