வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து முன்னெச்சரிக்கையாக 700 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அபாய சங்கு ஒலிக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டதால், அங்கிருந்த மாடுகள் ஆற்றில் சிக்கிக் கொண்டன.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், 36 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 35 அடியை எட்டியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, முன்னெச்சரிக்கையாக 700 கனஅடி, உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், எறையூர், புதுக்குப்பம், மணலி, மணலி புதுநகர் உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அபாய சங்கு ஒலிக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்று பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த மாடுகள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. பின்னர் அவை மெதுவாக ஆற்றை கடந்து, கரையை வந்தடைந்தன.