தமிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய, மத்தியகுழு அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டனர்.
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நனைந்து, முளைத்துள்ளன.
எனவே, நெல்லின் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறைக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிக்க, நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக் குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
இந்த குழுவினர், செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது, மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகளை பார்வையிட்டனர்.
