சென்னையில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 5 இடங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு, மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். அதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, பிஜேபி தலைமை அலுவலகமான கமலாலயம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லம், நடிகை திரிஷா இல்லம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சுமார் ஒரு மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இறுதியில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக மின்னஞ்சல் மற்றும் ஐ.பி. முகவரியை வைத்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.