மழைக்காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவை பரப்பும் வைரஸ் நோய்கள் ஆபத்தானதாக மாறுகின்றன. இது போன்ற நேரத்தில், “ஒரு கொசு நம்மை கடிக்கும்போது எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சுகிறது?” என்பதுபோன்ற சுவாரஸ்யமான கேள்விகள் எழுவது இயல்பு. அதோடு, “கொசு கடித்த இடத்தில் ஏன் அரிப்பு ஏற்படுகிறது?” என்ற கேள்விக்கும் தற்போது விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?
பொதுவாக, மனிதர்களை கடித்து இரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் மட்டுமே. ஒரு பெண் கொசு, ஒரு முறையில் 0.001 முதல் 0.01 மில்லி லிட்டர் (அதாவது 1 முதல் 10 மைக்ரோ லிட்டர்) வரை மட்டுமே இரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக, ஒரு கொசு 5 மைக்ரோ லிட்டர் இரத்தத்தை உறிஞ்சும். இது ஒரு சொட்டு தண்ணீரின் ஐந்தில் ஒரு பங்கிற்கு சமமான அளவாகும்.
இந்த விகிதத்தில், ஒரு நபரின் முழு இரத்தத்தை உறிஞ்ச, சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) கொசுக்கள் ஒரே நேரத்தில் அவரைக் கடிக்க வேண்டியிருக்கும்.
ஏன் கொசு கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது ?
பெண் கொசுக்களின் வாயில் “புரோபோசிஸ்” எனப்படும் ஊசி போன்ற உறுப்பு உள்ளது. இது நமது தோலைக் கடித்து, இரத்த நாளத்திலிருந்து இரத்தத்தை உறிஞ்ச உதவுகிறது. இதே நேரத்தில், கொசு சிறிதளவு உமிழ்நீரையும் தோலில் செலுத்துகிறது. நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இதனை அந்நிய பொருளாகக் கருதி, அதனை எதிர்த்து செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த இடத்தில் சிவப்பு மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
ஆண் கொசுக்கள் கடிக்குமா ?
ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. அவை இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. பதிலாக, தாவரங்களிலிருந்து வரும் சர்க்கரை திரவங்களை மட்டுமே உண்கின்றன. ஏனெனில், அவற்றிடம் பெண்கள் போல ஊசி போன்ற வாய்ப்பாகங்கள் கிடையாது. ஆகவே, ஆண் கொசுக்கள் நோய்களை பரப்பும் அபாயமும் இல்லை.
கொசுக்களின் அபாயம்
தோற்றத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், கொசுக்கள் உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. காரணம், அவை பரப்பும் நோய்கள். மலேரியா, டெங்கு, ஜிகா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்கள் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் உயிர்களைப் பறிக்கின்றன.
அனைத்து கொசுக்களும் மனிதர்களைக் கடிப்பதில்லை என்பது உண்மை. ஆனால் மனிதர்களை கடிக்கும் சில இனங்கள் மட்டும் உலகளவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதும் உண்மைதான்.