சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (55). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் இவர், தற்போது திருப்புவனம் நயினார்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8:45 மணியளவில், இவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், வீட்டின் முன்புறம் பதுங்கி நின்று தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் தலையில் முக்காடிட்ட இரண்டு நபர்கள் மட்டும் வாகனத்திலிருந்து இறங்கி வந்து, முருகனின் வீட்டு முன்புற கேட் மீது தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். குண்டு விழுந்து வெடித்ததில் கேட் பகுதியில் காயப்போடப்பட்டிருந்த துணிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. பயங்கர சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்புவனம் போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் வீட்டை ஆய்வு செய்து வெடிக்காத குண்டு சிதறல்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமக்கு யாரிடமும் முன்விரோதம் இல்லை என்று முருகன் தெரிவித்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் யாரையாவது பழிவாங்கும் நோக்கில் வீடு மாறி வந்து பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்களா அல்லது தொழில் போட்டியால் இந்தச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, வழிப்பறி மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதால், இப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் மாவட்டக் காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
