திருப்பூர்: “நாட்டில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ஆகக் கூடாது,” என்று தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் விஜயர்சன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 82 விநாயகர் சிலைகள், ஸ்ரீநகர் பகுதியிலிருந்து ஊர்வலமாக கிளம்பி, பல்வேறு பகுதிகள் வழியாக ஆலாங்காடு வந்தடைந்தன.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி,
“எந்த தடையையும் தகர்த்தெறிவதே விநாயகரின் சிறப்பு. இந்த விழாவுக்கு யாராலும் தடை போட முடியாது. எவ்வளவு தடைகள் வந்தாலும் விழா சிறப்பாக நடைபெறும். விநாயகர் எந்த அமைப்புக்கோ, தனி நபருக்கோ மட்டும் சொந்தமானவர் அல்ல. அனைத்து ஹிந்து அமைப்புகளுக்கும் இந்த விழாவை நடத்த உரிமை உண்டு,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது :
“மாநிலம், மொழி, ஜாதி என்று பிரிந்து கிடக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே ஹிந்து அமைப்புகளின் கடமை. ஹிந்துக்களை ஹிந்துக்களாக இருக்க வைப்பதும் அவற்றின் பொறுப்பு. எந்த அமைப்பிற்குள்ளும் பிளவு உண்டாகக் கூடாது.
ஈ.வே.ரா. விநாயகர் சிலைகளை உடைத்து, கடவுளை மறுத்தவர். ஆனால் இன்று தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
வங்கதேசம், பர்மா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூர் வந்து வேலை செய்பவர்கள் அதிகம் உள்ளனர். கேரளாவின் ஐந்து மாவட்டங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால், இந்தியா என்ற ஹிந்து நாட்டில் கூட ஹிந்துக்கள் சிறுபான்மையாகி விடுவார்கள். அந்த நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது,” என தெரிவித்தார்.

















