மூன்றாவது மொழியாக இந்தி ? ஸ்டாலின் கருத்துக்கு உத்தவ் சேனாவிடம் இருந்து எதிர்வினை !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழியை மூன்றாவது கட்டாய மொழியாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, மாநில அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் வந்து போராட்டத்தை முன்னெடுத்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணியுடன் கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி மொழியை மூன்றாவது கட்டாய மொழியாக கற்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீண்ட காலத்துக்குப் பிறகு சகோதரர்கள் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஒன்று கூடி பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தப் பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, “இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களே அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளன. மூன்றாவது மொழியாக இந்திக்கு தேவையென்ன?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் உத்தவ் தாக்கரே, “பாஜக அரசு மாநிலங்களின் மீது மொழியை திணிக்கக் கூடாது” என்றார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திப் பேச்சைத் தணிக்க முடியாத மகாராஷ்டிரா மக்களின் எழுச்சிக்கு பாராட்டு தெரிவித்தார். “மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி பாஜக இரண்டாம் முறையாக இந்தி திணிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது” எனவும், “இந்தி திணிப்பு காரணமாக பல இந்திய மொழிகள் அழிந்துள்ளன” எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் கருத்துக்கு எதிர்வினையாக, உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவரும் சிவசேனா எம்பியாகவும் இருக்கும் சஞ்சய் ராவத், “தமிழக நிலைப்பாடும், எங்களுடைய நிலைப்பாடும் வேறு. ஸ்டாலின் ‘இந்தி பேசவே கூடாது’ என்பதுபோல் எங்கள் நோக்கம் இல்லை. மகாராஷ்டிராவில் மக்கள் இந்தி பேசுகிறார்கள், அதனை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் பள்ளிகளில் கட்டாயமாக்குவதற்கு எதிராகத்தான் எங்கள் போராட்டம்” என்றார்.

Exit mobile version