பட்டியல் இனத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்திருந்த மனுவில், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 20 மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாகவும் கூறி, மனிதாபிமான அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை குறித்து ஆய்வு செய்தது. வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற மீரா மிதுனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை ரத்து செய்யக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்று அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
