தலைநகர் டில்லியில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டில்லியில் பெய்து வரும் கனமழையால் விமான நிலையத்துக்கு செல்லும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் தங்களின் விமான புறப்பாடு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, விமான நிலையத்திற்குச் சிறிது முன்பே புறப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
அதேபோல, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பதிவில், “டில்லியில் கடும் மழை காரணமாக அனைத்து விமானங்களின் புறப்பாடும் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விமான நேரங்களை சரிபார்த்து கொண்டு, விமான நிலையம் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக, டில்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அட்டவணை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் பயணிக்குமாறு விமான நிலைய அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

















