தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு வழக்கு விசாரணை

முருகப்பெருவனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாகப் போற்றப்படும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ள நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தொடங்கியது. முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள பாரம்பரியமான தீபத்தூணில், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து அமைப்புகளின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கினார். அதில், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் ‘மோட்ச தீபம்’ என அழைக்கப்படும் இடத்தில் மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய அந்தத் தீபத்தூணிலும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகக் கோயில் நிர்வாகம் கருதியது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தன்று தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று காலையிலேயே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன்பு முறையீடு செய்யப்பட்டது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையானது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புனிதமான இடமாகத் திகழ்வதால், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான இந்த வழக்கு இரு மதங்களின் நல்லிணக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பானது, திருப்பரங்குன்றம் கோயில் விழாக் கால நடைமுறைகளில் மிக முக்கிய மாற்றத்தை அல்லது தெளிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version