மதுரை: தள்ளாகுளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 7-ம் வகுப்பு மாணவனின் கையை தலைமை ஆசிரியர் முறுக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மன்சூர் அலிகானின் மகன் சையது அலி, மதுரை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, மாணவனை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் கையை முறுக்கியதாக மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். வலியால் துடித்த மாணவன் வீட்டிற்கு வந்து அழுததைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், “கையில் ஜவ்வு கிழிந்துள்ளது” என தெரிவித்து, கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளார்.
இதையடுத்து மாணவனின் தந்தை, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து, தலைமை ஆசிரியர் ரூபி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தலைமை ஆசிரியை, “மாணவருக்கு பள்ளி மூலமாகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. சீருடை அணியாதது குறித்து கண்டித்தேன். மாணவனை தாக்கவில்லை” என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவனின் வீட்டிற்கு சென்ற தலைமை ஆசிரியை மற்றும் சிலர், “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விசாரணைக்காக வந்துள்ளோம்” என கூறி, புகாரை திரும்ப பெறுமாறு பெற்றோரிடம் சமாதானம் பேச முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்ததாக கூறிய ஒருவரும், மாணவனின் உறவினரை மிரட்டும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்கு முன்பாகவே பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.