தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள் குழப்பங்கள் தொடங்கிவிட்டதாகத் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் முரண்பாடுகளை அடுக்கடுக்கான விமர்சனங்கள் மூலம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முன்னெடுத்துள்ள போதை ஒழிப்புப் பாதயாத்திரையை மையப்படுத்தித் தனது தாக்குதலைத் தொடங்கிய தமிழிசை, “தமிழகத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்றால் வைகோ அவர்கள் அறிவாலயத்தை நோக்கித்தான் நடைபயணம் செல்ல வேண்டும்; ஆனால் இந்த முக்கியமான பயணத்தைக் கூட காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது” என்று கூறி கூட்டணியின் விரிசலை அம்பலப்படுத்தினார்.
சமீபத்தில் வைகோவின் நடைபயண அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் அந்த நிகழ்வைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைச் சாடிய தமிழிசை, தமிழகத்தின் கடன் சுமை குறித்து காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரமும் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி வருவதைச் சுட்டிக்காட்டினார். “காங்கிரஸ் கட்சியினர் எந்த அளவுக்கு அறிவாலய அடிமைகளாகி விட்டனர் என்பதற்கு இதுவே சாட்சி” என்று அவர் கடுமையாகச் சாடினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் கோவில் வாசலில் நின்று கொண்டு இந்து பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாகக் குற்றம் சாட்டிய அவர், இதேபோன்ற கருத்துக்களை மற்ற மதத் தலங்களின் முன் நின்று பேசத் துணிவுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் குறித்துப் பேசிய தமிழிசை, “எங்களை அடிமை கூட்டணி என விமர்சிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும்; அசுர சக்தியோடு எதிரிகளை அடித்து நொறுக்கும் பலத்துடன் எங்கள் தே.ஜ. கூட்டணி இருக்கிறது. ஓட்டு சதவீதம் மற்றும் அனுபவ ரீதியாக நாங்கள் மிக வலுவாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசுகையில், “விஜய் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தால் அது அவருக்கு நல்லது; ஒருவேளை வரவில்லை என்றால் அது அவருக்குத்தான் நஷ்டம்” என்று கூட்டணி அழைப்பை மறைமுகமாக முன்வைத்தார். 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வின் செயல்பாடுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
