தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை மண்டலம் வாரியாகத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) விருதுநகரில் உள்ள ‘கலைஞர் திடலில்’ பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கடந்த டிசம்பர் 14-ல் திருவண்ணாமலையில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில், அதே போன்றதொரு பிரம்மாண்டத்தை தென் தமிழகத்திலும் நிகழ்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று அகிலமே வியக்கும் வகையில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைக்கத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் சந்திப்பிற்குத் திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளார். பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை 4:00 மணி அளவில் தொடங்கும் இந்த நிகழ்வில், தென் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விருதுநகர் – காரியாபட்டி சாலையில் உள்ள கல்குறிச்சி பகுதியில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்து, பணிகளைத் துரிதப்படுத்தினார்.
இந்நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பிற்கான வரவேற்பு மற்றும் களப்பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர். சமீபகாலமாகத் தென் தமிழகத்தில் மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், திமுகவின் இந்த இளைஞரணிச் சந்திப்பு தென் மண்டலத்தில் அக்கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகவும், தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனையாகவும் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
